FUTURE PONGAL
#டிஜிட்டல்_பொங்கல்
அபார்ட்மெண்ட்டின் 167வது மாடியில் இருந்தது அவன் வீடு! ஜனவரி குளிர் ஜன்னல் கதவில் படிந்திருக்க உள்ளே மிதமான உறுத்தாத குளிர் ஏசியாக வீசிக் கொண்டிருந்தது. ‘தைப்பொங்கலும் வந்தது’ பாடலின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ் ரிங் டோனில் அலாரம் ஒலித்தது!
குவிந்து கிடந்த போர்வைக்குள்ளிருந்து குழந்தை பாகுபலியை ஏந்திய ராஜ மாதா போல ஒரு கை வெளிப்பட்டு அலாரம் ஒலித்த ஆப்பிள் ஐ போன் 76 Pro max ஐ எடுத்தது, நேரம் அதிகாலை 5:30!
ஏங்க எழுந்துட்டிங்களா இன்னிக்கு பொங்கல் என்ற அவன்..
மனைவியின் அசரீரீ லேட்டஸ்ட் மாடுலர் கிச்சனில் இருந்து ஒலித்தது போர்வையை விலக்கி உதறி சோம்பல் முறித்தான், மீண்டும் தூங்க வந்த ஆசையை அடக்கிக் கொண்டான். எழுந்து பாத்ரூமிற்கு சென்று 15 நிமிடங்களுக்குப் பின் புதிய மலர் போல வெளியே வந்தான்.
ஷேவ் செய்த கன்னங்களில் ஓடிகலோன் மஸ்க் மணக்க, ப்ரஷ் செய்த பின் கொப்பளித்த ஸ்டிராபெர்ரி மவுத் வாஷில் வாய் மணக்க கிச்சனில் நுழைந்தான். அடர் பர்ப்பிள் மினி ஷார்ட்சும் வயலட் ஸ்லீவ்லெசும் அணிந்து குளித்து முடித்த அடையாளமாக தலையில் முடிச்சாக டவல்
கிச்சன் வேலைகளில் மும்முரமாக இருந்தாள் அவன் மனைவி அதிகாலையிலேயே எழுந்துவிட்டாள் போல! அவளைச் சுற்றி ஒரு வாசனை மாநாடே கூடியிருந்தது! பின்புறமாக சென்று அவளைக் கட்டியணைத்து கழுத்தோரத்தில் மென்மையாக முத்தமிட்டான்.
தடுப்பதா விடுப்பதா என ஒரு கணம் தயங்கியவள் அய்யே போதுமே ரொமான்ஸ்! சார் இன்று பொங்கல்! இன்னிக்கு உருப்படியா என்ன பண்ணியிருக்கிங்க? என்றாள் அவனை விடுவித்துக் கொள்ளாமல் ஒரு கப்பில் க்ரீன் டீ ஊற்றியபடி! அவன் இரு கையில் ஒரு கையை..
அவள் தோள்களில் வைத்து மறு கையால் க்ரீன் டீ கப்பை ஏந்திக் கொண்டான். டியர்! இன்னிக்கு பொங்கல் பண்டிகை இல்லியா! இதை செலிபரேட் பண்ண Tamil fest டாட் காமில் நாம பாரம்பரிய பொங்கல் வைக்கணுமுன்னு ரிஜிஸ்டர் பண்ணியிருக்கேன்.
அவங்க நமக்காக பொங்கல் வச்ச வீடியோவை ஃபேஸ்புக் லைவில் அனுப்பிவிடுவாங்க! பொங்கலை பேக் பண்ணி டோர் டெலிவரி தந்துடுவாங்க கரும்பு ஜூஸ் கூட மிண்ட் ஜிஞ்சர் போட்டு டெட்ராய்ட் பேகில் வந்திடும்! மஞ்ச கிழங்கை பைபர்ல பண்ணி அனுப்புவாங்க.
அதை நம்ம டிஜிட்டல் சுவாமி ரூமில் வச்ச ஆட்டோமேடிக்கா அதுவே லைட் மாதிரி யெல்லோ கலரில் எரியுமாம்! நாம பிளாட்டினம் பொங்கல் கேட்டகிரில புக் பண்ணியிருக்கோம் சோ எவ்ரி திங்க் ரெடி! இதுக்கு நமக்கு நாலு சினிமா டிக்கெட் கூட ஃப்ரீ.!
8 ஓ கிளாக் நமக்கு பொங்கல் டெலிவரின்னு வாட்ஸ் அப் வந்திருக்கு லெட்ஸ் ஸ்டார்ட் அவர் பொங்கல் செலிபிரேஷன் ஓகே என்றான். அட போங்க என சலித்துக் கொண்டாள் மனைவி, என்ன டியர் ஏன் சலிச்சுக்கிற? இல்லிங்க இதெல்லாம் நாம வீட்டில் செய்ய முடியாதா?
ஒரு பழைய டாகுமெண்டிரி மூவியில் நேத்து பார்த்தேன், எவ்வளவு சூப்பரா இருந்தது தெரியுமா வயல்வெளி கிராமம், மாடு, அடுப்பு, பானை, கரும்பு வாவ் லவ்லி அட்மாஸ்பியர் அதெல்லாம் நான் அனுபவிக்க மனசு தவிக்குதுங்க என்றாள் கண்ணில் ஏக்கம் தெறிக்க!
ஆர் யூ க்ரேஸி! அதெல்லாம் 50 வருஷத்துக்கு முன்னாடி, இப்ப எல்லாம் அரசு மியூசியத்துல தான் அதை பார்க்கணும்! நம்ம நாட்டில் இப்போ ஏது கிராமம்!!! ஏன் இந்த ப்ளாட்டுல நம்ம சொந்த வீட்டுல பொங்கல் வைக்கவே அனுமதி இல்ல இதுல எங்க கொண்டாட?
இங்க பாரு இந்த பொங்கல் வாங்கினதுக்கு ஆஃபரா ஒரு ஜம்போ சிக்கன் பீட்ஸாவும் 2 லிட்டர் கோக்கும் ஃப்ரீயாம் அதை நெனைச்சு சந்தோஷப்படுவியா கிராமம், பொங்கல்னு.. “ஏங்க அப்போ நம்ம மக்கள் பாரம்பரியமான பொங்கலை மறந்துடுவாங்களா என்றாள்.
மெல்ல அவள் தலையைக் கோதிவிட்டு சொன்னான் இந்தளவுக்காவது இன்னும் பொங்கல் பண்டிகை நம்ம ஜெனரேஷனில் இருக்கேன்னு சந்தோஷப்படு டியர்” என்ற போது அவனது மொபைலில் இன்றைய அரிசி விலை கிலோ ₹2300 என திரையில் ஒளிர்ந்தது.
#கிபி2075இல்_பொங்கல்
Comments
Post a Comment