☃️காஷ்மீர்

 #காஷ்மீர்_பயண_அனுபவங்கள்


 


நான் 2013 ஆம் ஆண்டில் ஜம்முவில் இருந்து ஶ்ரீநகருக்கு மலைச் சாலையில் காரில் பயணம் செய்த அனுபவம் மிகவும் திரில்லிங் நிறைந்தது. கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். 54 கிமீ தூரமுள்ள கொடைக்கானலே 3 மணிநேரப் பயணம் எனும் போது 300 கி,மீ மலைப்பயணம் எவ்வளவு நேரம் என்பதை ஊகிக்கவும்! முதலில் கொடைக்கானல் போலத்தான் அந்தப் பயணம் இருந்தது! 


மலையேற ஏறத்தான் இமயத்தின் பிரமாண்டம் தெரிந்தது! சாலை விளிம்புப் பள்ளங்கள் 2000 அடி 5000 அடி என சரேல் சரேல் என செங்குத்தாக இறங்கி வைகுந்தத்தில் முடிந்தன! தூரத்து மலை மீது வைஷ்ணவி கோவில் தெரிந்தது! அந்த மலையை ஒருவித பயத்துடன் டூவீலரில் கோவிலை கடக்கும் போது சாமி கும்பிடும் ஸ்டைலில் விரல்களால் தாடையில் டைப்பிட்டு வேண்டிக் கொண்டோம் 


வடக்கத்திய  டிரைவர்கள் மிக மிக அவசரமானவர்கள் போலும், இந்த அபாயகரமான சாலையில் 100 கி.மீ வேகத்திற்கு குறையாது மலை ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர். மலைப்பாதையில் கடை பிடிக்கும் எந்த ஒரு விதிமுறையும் அங்கு இல்லை ஒரு வேளை அந்த அதல பாதாளத்தில் அதை தள்ளிவிட்டு விட்டார்கள் போல, எங்கள் பயணம் முழுவதும் நாம் திரும்பிய இடமெல்லாம் ராணுவம்! 


ராணுவத்தில் இத்தனை சீருடையா என்று வியக்கலாம்! ஏராளமான செக்போஸ்ட்டுகள், டீக்கடையில் நின்று டீ சாப்பிடும் போது அலட்சியமாக AK 47, AK56, லாஞ்சர், எல்லாம் சுவற்றில் சாய்த்து வைத்து எங்களோடு டீ சாப்பிட்டு கொண்டு இருந்தனர் ராணுவர்கள்! பக்கத்து கிராமத்தில் நேத்து துப்பாக்கி சண்டை நடந்தது என்ற போது மிச்ச டீயை கீழே ஊற்றிவிட்டு அவசரமாக கிளம்பினோம்.


அதிலும் நீங்கள் எதாவது ஒரு இடத்தில் இறங்கி புகைப்படம் எடுத்தாலோ 5 நிமிடத்திற்கு மேல் நின்றாலோ மலைகளில் இருந்து ராணுவத் தலைகள் முளைக்கும்! ஆனால் அவ்வளவு சினேகமாக பழகுகிறார்கள்! என்னை ஒரு ராணுவர் நீங்கள் எந்த ஊர் என்ற போது மதராஸ் என்றேன் “ஓ சென்னை சூப்பர் கிங்ஸ் என்றார்! இதுவரை நம்மை மதராஸி என்று அழைத்தவர்கள் ஐபிஎல் மூலம் திருந்தி..


சென்னை என்று ஒப்புக்கொண்டது மகிழ்வாக இருந்தது. மலைப் பயணம் அருமையாக இருந்தது ஒரு 100 கி.மீ மலை ஏறியதும் எல்லாம் விமான காட்சி தான் அதிலும் கரை புரண்டு ஓடும் நதி ஒன்று 1500 அடி பள்ளத்தில் நம்மோடு பயணித்து வரும் காட்சி.. அடடா! திடீர் வளைவுகள், பாறைகள் உருண்டு வரும் பகுதி, அபாயகரமான பள்ளம் என்ற அறிவிப்புகள் வயிற்றைக் கரைத்து கொண்டிருந்தது. 


150 கி.மீ தாண்டியதும் காஷ்மீரிகளின் மலை கிராம வாழ்க்கை தெரிய ஆரம்பித்தது! அங்கு ஆடு வளர்ப்பது மிக முக்கியத் தொழில்! நம்ம ஊர் ஆடுகள் போல அல்ல அத்தனையும் கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகள் குறிப்பிட்ட காலத்தில் அவற்றை கீழிருந்து மேலே குளிருக்கு அழைத்து செல்ல வேண்டும். அப்போது தான் அந்த உரோமம் வளருமாம்! நீங்கள் கூட்டமாக எவ்வளவு ஆடுகள் பார்த்திருப்பீர்கள்? 


100, 200,500, 1000,2000? கிட்டத்தட்ட அந்தப் பயணத்தில் 2 லட்சம் ஆடுகள் நான் பார்த்து இருப்பேன்! ஒவ்வொரு ஆட்டு மந்தையிலும் குறைந்தது 2000 ஆடுகள் இருக்கும்! அதற்கு நம்ம ஊரு கீதாரி போல ஒருவர், அவரது உதவியாளர் இருவர் இவர்களுக்கு சமைக்க 3 பேர் மொத்தம் 6 பேர் குழு! கட்சி மாறக்கூடிய எம்.எல். ஏக்களை அழைத்து செல்வது போல் அத்தனைப் பாதுகாப்பாக.. 


அவற்றை அழைத்துச் செல்கின்றனர், அப்படியும் சில ஆடுகள் பள்ளத்தில் தாவி ஓடிவிடுமாம்! வெறும் விசில் சப்தத்திலேயே அத்தனை ஆடுகளையும் வழி நடத்தி செல்கிறார்கள்! 2000 ஆடுகள் சாலை நடுவே சென்று கொண்டு இருக்க எங்கள் வண்டி வழி கேட்டு ஹாரன் அடிக்க அந்த கீதாரி ஒரு விசில் கிக்கிக்கிக்கிக்கி என்று அடித்த 5 வினாடிகளில் அத்தனை ஆடுகளும் வண்டிக்கு வழி விட்டு..


வசுதேவருக்கு பிளந்த யமுனை போல ஒதுங்கியது ஆச்சர்யம்! அந்தக் கீதாரிகள் குரலுக்கு அவ்வளவு பணிவு, பயம்! அடுத்து மலைக்குகை பயணங்கள்! நீளமான இருள் குகைக்குள் பயணம் சிலிர்ப்பூட்டும் பயணங்கள்! இந்த குகை வாசலில் ராணுவத்தினரின் செக்போஸ்ட் உள்ளது, இங்குதான் அந்த ஆட்டு மந்தைகள் காத்திருப்பில் வைக்கப்படுகிறது! கூட்டணிக்கு காத்திருக்கும் கட்சிகள் போல.


ஆனால் ரொம்ப காக்க வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்த மந்தைகளை அந்த கணவாயுள் அனுமதிக்கிறார்கள்! திடீரென்று சூழும் இருள் பிறகு வெளிச்சம் என அற்புதமான பயணம் அது! கார்கில், லே, லடாக், போன்ற ஊர்களின் தூரத்தை குறிப்பிடும் அறிவிப்பு பலகைகளை பார்க்கும் போது நாம் தேசத்து எல்லையில் இருக்கிறோம் என்பது பெருமிதமாக இருந்தது.


சாலையோரம் எல்லா கடைகளிலும் கிரிக்கெட் பேட்டுகள் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்! காஷ்மீர் வில்லோ என்ற மரத்தில் செய்யப்படுபவை கிரிக்கெட் பேட்டுகள் என்பதை இங்கு நினைவு படுத்துகிறேன்! காஷ்மீரை நெருங்க நெருங்க நம்ம சென்னை ரோடுகளில் உள்ள கும்பகோணம் காபி கடை போல குங்குமப்பூ கடைகள் தென்படுகின்றன இடையிடையே சாப்பிட நிறுத்திய..


ஓட்டல் கடைகளில் தந்தூரி ரொட்டிகளும் தட்டைப்பயிர் க்ரேவியும் அற்புதம்! எல்லா கடைகளிலும் ப்ரெட் ஆம்லெட் கிடைப்பது ஆறுதல்! இத்தனை தூரத்திலும் தொடர்ந்து கூட வரும் நெட் வொர்க் BSNL மட்டுமே! ஹட்ச் நாய் விளம்பரம்  BSNL க்கு தான் பொருந்தும்..! காஷ்மீர் செல்பவர்களுக்கு BSNL நெட்வொர்க் தான் சிறந்தது!  காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 8 மணிக்கு ஶ்ரீநகரை அடைந்தோம்! 


ஶ்ரீநகர் அனுபவங்கள் இன்னொரு தனிப்பதிவாக.. 


Comments

Popular posts from this blog

29. சிற்றம் சிறுகாலே..

27. கூடாரை வெல்லும்..

30. வங்கக் கடல்..