1. மார்கழித் திங்கள்.
1. மார்கழித் திங்கள்..
#மார்கழியின்_மறை
குளிரான மார்கழியின் அதிகாலைப் பொழுது! இன்றும் நாமெல்லாம் தூக்கத்திலிருந்து விழிப்பு வந்தாலும் கூட படுக்கையிலிருந்து எழ மனமில்லாது சுகமாகப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடக்கிறோம். சிலருக்கு இந்த அதிகாலையின் குளிர் நீரில் குளிக்கப் பிடிக்காது. மார்கழி அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது பரம சுகம்!
நூறு ஏசிகளின் காற்று நம் உடல் தழுவுவது போல நம் நரம்பு மண்டலத்தை சிலீரிட வைக்கும் அந்தப் புத்துணர்வை குளித்துப் பார்த்துதான் அனுபவிக்க முடியும். ஆனால் பலர் வெந்நீரில் குளித்து அந்த அனுபவத்தை இழக்கிறார்கள்! ஆண்டாள் மதி நிறைந்த நன்னாளின் அதிகாலையில் குளத்தின் சில்லென்ற நீரில் நீராட..
பெண்களை அழைக்கிறார். அதிகாலை நேரம் நிலவு தன் பணி முடிந்து ஓய்வுக்கு போகின்ற வேளை, இன்றைய கவிஞர்கள் பாடும் குளிர் நிலவே, ஈர நிலாவே என்பதெல்லாம் இந்த அதிகாலை நிலவு தான்.! குளிரை விலக்கி கதிரவன் பணிக்கு வரும்முன் தண்ணெழில் பொழிந்து விடை பெறும் நேரம்.
எப்பேர்ப்பட்ட சுறுசுறுப்பானவர்களும் சுகமாய் மயங்கிக் கிடக்கும் இவ்வேளையில் ஏன் இன்னும் உறக்கம்? ஏனிந்த தயக்கம்? எழுந்து வாருங்கள், செல்வச் சிறுமிகளே நம் நாராயணன் நமக்கெல்லாம் அருள்தர காத்திருக்கும் போது அரைத் துக்கம் தகுமா? கார்மேக வண்ணமும், சூரியன் போல வெப்பமும், நிலா போல் குளுமையும் ஒன்றாக உடையவன் நம் கண்ணன்.
அந்த மாயக்காரனை நினைத்து மார்கழி மாதத்து நிறைமதி நன்னாளில் நீராடச் செல்வோம். ஆயர்குல செல்வப் பெண்களே! கூரான வேல் ஏந்தி நமக்கு வரும் கொடும் துன்பத்தை அழிக்கும் நந்தகோபனும், அழகிய கண்கள் உடைய யசோதையும் வளர்த்த இளஞ்சிங்கம் கண்ணன். அவனே நமக்கு பறை தந்து அருள்வான்.
அதற்கு முன் இந்த தூக்கம் பைசா பெறாத ஒன்றாகும். தூக்கத்திலிருந்து எழுந்திருங்கள். உலகமே அவனை புகழும்படி பாடிடுவோம் வாருங்கள். ஆண்டாள் அழைத்தால் கண்ணனே ஓடி வரும் போது, ஆயர்குல பெண்கள் வர மாட்டார்களா என்ன!
ஆண்டாள் வசித்த திருவில்லிப்புத்தூர் தென் தமிழகத்தில் ஓர் சிறிய ஊர்! ஆனால் அந்த ஊரையே ஆயர்பாடியாகவும் அங்குள்ள சிறுமிகளை ஆயர் குல சிறுமிகளாகவும் எண்ணி பாவை நோன்பை துவக்கி வைத்தவர் ஆண்டாள்.!
ஆம்! தமிழகத்தில் ஆயர் குலப் பெண்களின் முதல் மேயர் நம் ஆண்டாள் நாச்சியார் தான்! இன்று மார்கழி முதல் நாள்! பயணிப்போம் அடுத்த 30நாட்களும்.!
மார்கழி 1ஆம் நாள் பாடல்..
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

Comments
Post a Comment