8. கீழ்வானம் வெள்ளென்று…
8. கீழ்வானம் வெள்ளென்று...
#மார்கழியின்_மறை
“வெள்ளென” வந்துருப்பா” மதுரை மாவட்ட மக்கள் பேசும் மொழியில் இன்றைக்கும் பயன்படுத்தும் வார்த்தை இது. வெள்ளென என்பது அதிகாலையை குறிக்கும் சொல்லாகும்! ஆனால் நட்டநடு சென்டர் என்ற விளிப்பது போல “காலையில் வெள்ளென வந்துரு” என்றால் காலையில் சீக்கிரமா வந்துரு என்று அர்த்தமாகும்.
இதை வட்டார வழக்குத் தமிழ் அல்லது பாமர மக்களின் தமிழ் என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். பைய, சிலம்புவது, வெள்ளென போன்ற சொற்கள் பாசுரங்களிலும், சிலப்பதிகாரத்திலும் உள்ளன! அதன் அர்த்தம் சிதையாமல் 1300 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்கள் பேசும் வழக்கில் இந்தச் சொற்கள் உள்ளன!
உலகில் வேறெந்த மொழிக்கும் இத்தனை நெடிய மொழித் தொடர்ச்சி கிடையாது! நம் தமிழ் மொழியில் மட்டுமே இப்படி வார்த்தைகள் இன்றும் பயனில் உள்ளது. இதுவே நம் தமிழின் சிறப்பாகும். கீழ் வானம் வெள்ளென்று எனத் துவங்கும் இப்பாசுரத்தில் ஆண்டாள் ஒரு மெல்லிய அங்கத நகைச்சுவையை கலந்து துவக்குகிறார்.
“அடியேய் தூங்கு மூஞ்சிப் பெண்ணே பார் கீழ்வானம் விடிந்து புல் வெளியில் எருமைகள் பரந்து மேய்கின்றன” நன்றாகக் கவனியுங்கள் பாசுரங்களில் பல இடங்களில் பசுக்களை பற்றிப் பாடிய ஆண்டாள் இங்கு எருமையைப் பற்றி குறிப்பிடுவதன் காரணம் என்ன தெரியுமா? எருமை ஒரு சோம்பேறியான விலங்கு அசமந்தம் பிடித்தது.
மிக மெதுவாக ஒருவர் செய்யும் காரியத்துக்கு எருமையை உதாரணம் சொல்வது இன்றும் வழக்கம்! அடியே பெரிய சோம்பேறியான எருமையே அதிகாலையில் எழுந்து வந்து மேய்கிறது, நீ இன்னுமா எழவில்லை? நீ அதைவிட சோம்பேறியா? என்கிறார் கிண்டலாக! ஆண்டாள் பாசுரங்களில் அங்கதச் சுவை மெல்லிய இழை போல..
ஆங்காங்கே ஒளிந்திருக்கும்! பெண்ணே நம்மை வரச்சொல்லி அருள்பவன் கண்ணன் அவனைச் சேவிக்க பாவை நோன்பிருக்கும் இடத்திற்கு பலர் ஏற்கனவே போய்விட்டனர் சிலர் அங்கு கிளம்பி போய்க்கொண்டு இருக்கின்றனர். அவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தி உன் வீட்டு வாசலில் வந்து நிற்கின்றோம்.
நீ எழுந்து வா நாம் வணங்கும் கண்ணன் யார் தெரியுமா? கேசி எனும் குதிரை வடிவெடுத்த அரக்கனின் வாயைப் பிளந்தவன். முஷ்டிகன், சாணுகன் என்னும் இரு மல்லர்களை தோற்கடித்து வென்றவன்.. அவன் தேவர்களுக்கெல்லாம் தேவன். அவன் நம்மை வாவென்று அழைத்து நமக்கு ஆராய்ந்து அருள்வான் என்கிறார் ஆண்டாள்!
மார்கழி 8 ஆம் நாள் பாடல்..
கீழ்வானம் வெள்ளென்று எருமைசிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
Comments
Post a Comment