7. கீசு கீசு என்று…
7.கீசு கீசு என்று...
#மார்கழியின்_மறை
ஆறாவது பாசுரத்தில் பல்வேறு இயற்கையான சப்தங்களை வர்ணித்த ஆண்டாள் ஏழாவது பாசுரத்தில் மனிதர்களின் செயல்களால் உருவாகும் சப்தங்களை ஒரு தேர்ந்த சவுண்ட் என்ஜினியரின் இசைக் கோர்வை போல தொகுக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு சுவாசம் போல உயிர் தருவது RR எனப்படும் ரீ - ரெகார்டிங் தான்!
ஆண்டாள் மிக அழகாக இந்த பாசுரத்தில் எழுதியிருக்கும் ஒலிகளை நாம் படிக்கும் போதே கேட்கலாம்! மிகுந்த ரசனை படைத்தவர்களால் தான் இப்படி ஆழ்ந்து கவனித்து எழுத முடியும். அன்றே ஆஸ்கார் விருது இருந்திருந்தால் சிறந்த சவுண்ட் இஞ்சினியர் விருது பெற்ற இந்தியாவின் முதல் ‘பூக்குட்டி’ஆகியிருப்பார் கோதை பெருமாட்டி!
ஆண்டாள் பாடிய அதிகாலையே பல்வேறு ஒலிகளின் கதம்பமாக விடிகிறது! கீச் கீச்சென கரிக்குருவிகள் தங்களுக்குள் கலந்து உரையாடும் அந்த ஒலி உங்களுக்கு கேட்கவில்லையா? இதோ நறுமண மலர்கள் சூடியதால் மணம் வீசும் கூந்தல் பெற்ற ஆயர்குலப் பெண்கள் தயிரை மண் பானையில் மத்தால் கடைகிறார்கள்.
பானையில் தயிர் சுழலும் ஒலியே பெரும் இரைச்சலாக ஒலிக்கிறதே அது கேட்கவில்லையா? ஆச்சியர் தயிர் கடையும் மத்தை முன்னும் பின்னும் இழுக்கும் போது அவர்கள் உடலும் குலுங்குவதால் கலகலவென ஒலிக்கும் அவர்கள் கழுத்து காசுமாலையும் தாலிக் கொடியும் ஒன்றொடு ஒன்று உரசும் சப்தமும் கேட்கவில்லையா?
அட இவையனைத்தையும் விட மனமுருகி அந்தக் கேசவனின் புகழை நாங்கள் பெருங்குரலெடுத்து பாடி வருகிறோமே அது கூடவா உனக்கு கேட்கவில்லை? இத்தனை ஒலிகளையும் கேட்ட பின்பும் கேட்காதது போல படுத்துக் கொண்டு இருக்கின்றாயே பேய்ப் பெண்ணே? இவ்வளவு சப்தங்கள் கேட்டும் தூங்குகிறாய் என்றால்..
நீ பெண் பிள்ளையே அல்ல! பேய் தான் இப்படித் தூங்கும்.. நமது நாரணமூர்த்தியை போற்றிப் பாடுவதை விட உனக்கு இந்த உறக்கம் தான் பெரிதா? வா.. எழுந்து வந்து கதவைத் திற! அவனருள் என்னும் காற்று அப்போது தான் உள்ளே வரும்! உன் உள்ளும் புறமும் மலரும் என்கிறார் சப்தங்களை தொகுத்த சவுண்ட் இஞ்சினியர் ஆண்டாள்!
மார்கழி 7ஆம் நாள் பாடல்..
கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
Comments
Post a Comment