6. புல்லு சிலம்பின காண்..

 6. புள்ளும் சிலம்பின காண்..

#மார்கழியின்_மறை

பெருமாளுக்கு சங்கும் ஓர் ஆயுதம்! அவரது அடையாளம் ! நமது நாஸ்டால்ஜியா நினைவுகளில் இளம் பிராயத்தில் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6மணி சங்கு என குறிப்பிட்ட நேரங்களில் சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்! இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு. சங்கொலி என்பது எந்த நல்லவை தொடங்கும் போதும் கெட்டவை முடியும் போதும் ஒலிக்கும் சப்தம்.! 


பிறப்பு, இறப்பு, ஆலயம், போர் என வாழ்வில் சங்கொலிக்காத இடமே இல்லை. கண்ணனின் பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை படித்திருப்போம்! அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலிலிருந்து பேரொலியாய் ஒலிக்கிறது. அது அந்த நாளின் நல்ல தொடக்கமாக அமைய ஒலிக்கிறதே அந்த சப்தம் உங்கள் காதுகளில் விழவில்லையா? எனக் கேட்டு ஆரம்பிக்கிறார்.


அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார். இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம். இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு விஷயத்தில் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஆண்டாள் முன்னோடி அவர்களுக்கு அவங்க கட்சித் தலைவர்களின் புகழ் ஆண்டாளுக்கு கிருஷ்ணனின் புகழ்! 


அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது! பறவைகள் சிலம்ப, சங்கதிரும் ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா, உங்களுக்கு தெரியுமா? நம் கண்ணன்  பூதகியிடம் பால் குடித்து கொன்றது, சகடனை காலால் நிறுத்திக்கொன்றது, பாம்பின் மேல் உறங்கியது என அவர் காலத்து மாண்பு மிகு, இதய தெய்வம் போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்...


மனதில் நாரணனை நினைத்து முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம்! அதை கேட்பதற்காக வாவது எழுந்து வாருங்கள் என்கிறார்! வைணவர்கள் அதிகாலையில் அரி என உச்சரிப்பது வாழ்வில் நலம் விளைவிக்கும் என்பார்கள். 


ஆனால் அது கூட வேண்டாம்! அரி என்னும் சப்தம் நம் காதுகளில் விழுந்தாலே போதும் என்கிறார்.. கண்ணனின் மீது காதலில் விழுந்த ஆண்டாள்.!


மார்கழி 6ம் நாள் பாடல்...


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

Comments

Popular posts from this blog

29. சிற்றம் சிறுகாலே..

27. கூடாரை வெல்லும்..

30. வங்கக் கடல்..