5.மாயனை மன்னு..
5. மாயனை மன்னு...
#மார்கழியின்_மறை
பொதுவாக நமக்கு பிடித்தவர்களுக்கு ஒரு பட்டப் பெயர் வைப்பது இயல்பு. சிலநேரம் வேடிக்கையாக நாம் வைத்த அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிடும். சிலருக்கு பெரிய தலைவர்களாலும், மக்களாலும் பட்டப் பெயர் சூட்டப்பட்டு காலாகாலத்திற்கும் அந்தப் பெயரே நிலைக்கும், அவரது உண்மைப் பெயரே மறந்துவிடும்.!
உதாரணம் தந்தை பெரியார் ‘சிவாஜி’ கணேசன் என்று நடிகர் திலகத்தை அழைத்து கவுரவித்தார். அதன் பின் அவர் கணேசனாக அழைக்கப்படாமல் சிவாஜியாகவே வாழ்ந்து புகழுடம்பு எய்தினார். இப்படி வைக்கப்படும் பெயர்கள் தான் கால காலத்திற்கும் நிலைக்கும் ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் இதைத் தான் பாடுகிறார்...
தனது உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் கண்ணனுக்கு ஆண்டாள் தரும் பட்டங்களைப் பாருங்களேன் மாயக் காரன், வடமதுரைச் செல்வன், யமுனைத் துறைத் தலைவன், ஆயர்குல அணிவிளக்கு என்றெல்லாம் அவரை விளித்துவிட்டு., முத்தாய்ப்பாக ஒரு தலைவனே அசந்து வியந்து போவது போல அவனை இப்படி விளிக்கிறார்..
நீ உன் தாய் வயிற்றுக் குடலினை தூய்மை செய்த குலவிளக்கு என்று! தாமோதரனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்! தகுதியில்லாத தங்கள் தலைவனைப் போற்றி, வெறும் புகழ் மொழியை மட்டும் தந்து அமைச்சர் பதவியைப் பெறும் இக்கால அரசியல்வாதிகளைப் போல் இல்லாமல்..
தன் மனமுவந்து இந்தப் பட்டங்களை எல்லாம் எந்த பிரதிபலனும் பாராது பெருமாளுக்கு சூட்டி மகிழ்கிறார் ஆண்டாள்! மாயக் கண்ணனின் நாமத்தைச் சொல்லி பரிசுத்தமான இதயத்துடன் அவரை பூத்தூவி வணங்கினாலே நாம் செய்த தீமைகள் மட்டுமின்றி, நாம் செய்யவிருக்கும் தீய எண்ணங்கள் கூட தீயிலிட்டது போல் பொசுங்கிவிடும்!
அவன் நம் பிழைகளை மன்னித்து பிழைக்க வைப்பான். அது ஒன்றே போதும் வேறென்ன வேண்டும். அவனை வேண்டுவது ஒன்றே வேண்டும் என்கிறார். இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் இந்தப் பெயர்களில் தானே அனைவரும் அவனை வழிபடுகிறோம். ஆம் தூய மனதோடு ஆண்டாள் அழைத்த பெயர் ஆண்டாண்டுகள் வாழும்.!
மார்கழி 5 ஆம் நாள் பாடல்..
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
Comments
Post a Comment