4. ஆழிமழைக் கண்ணா…

 4. ஆழிமழைக் கண்ணா.. 

#மார்கழியின்_மறை

மழை உலகிற்கு இயற்கை அளிக்கும் கொடை! ஏன் இந்த உலகமே உருவானது மழையால் தானே! அக்னி மழை, அமில மழை, தூசு மழை, இப்படிப் பல மழைகள் பல நூற்றாண்டுகளாகப் பெய்து உருவானது தானே இந்த பூமி! மழை எப்போதும் மகிழ்ச்சியைத் தரும். ஆயிரம் புயல்கள் வீசி அதன் பாதிப்புக்கு நாம் அஞ்சினாலும்..


பேரிடர் தராத மழையை விரும்பாதவர்கள் யார்? தமிழ் சினிமாக்களில் கூட மழைப் பாடல்கள் பிரசித்தம்! கதாநாயகி அறிமுகமே மழையில் நனைந்து ஆனந்தமாக துள்ளி ஆடும் பாடலாக, காதல் பாடலாக மழைப் பாடல்கள் ஏராளம். ஆனால் ஆண்டாள் எழுதிய இந்த மழைப் பாடல் அறிவியலும் ஆன்மீகமும் கலந்த தனித்துவம் மிக்க பாடல்.


திருப்பாவையில் மழை பற்றிய இந்த பாசுரத்தை மொழி பெயர்த்து வெளிநாட்டவரிடம் சொன்னால், மிக மிகச் சாதாரணமாக இது உலகில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே என்பார்கள். அவர்களிடம் இது 1100 வருடங்களுக்கு முன் எழுதியது என்று சொல்லிப் பாருங்கள்.. அவர்கள் வியப்பில் உறைந்து போவார்கள்!


மழை எவ்வாறு உருவாகிறது என்பதை அன்றே சிந்தித்துச் சொன்ன ஆண்டாள் அந்த காலத்து மக்களால் “வெதர் உமன்” என்று போற்றப் பட்டிருக்கலாம். இந்த மழையை வர்ணிக்கும் போதும் கூட அவர் பெருமாளை ஒப்பிட்டு வர்ணிக்கிறார் எனும் போது அவருக்குள் மேகமாய், மின்னலாய், இடியாய், மழையாய் அரங்கனே இருக்கிறார்.


பாருங்களேன் கண்ணனின் கரிய நிறத்தை மேகமாகவும், அவரது சுதர்சன சக்கரத்தை மின்னலாகவும், அவரது பாஞ்சஜன்யம் எனும் சங்கின் முழக்கத்தை இடியாகவும், அவரது சாரங்க வில்லில் இருந்து சீறிப்பாயும் அம்பை மழையாகவும் ரசனையோடு வர்ணிக்கிறார். நீர் கடவுளான வருணனை அழைத்து வருணா.. நீ கடலில் இறங்கி..


கடல் நீரை கவர்ந்து அள்ளிக்கொண்டு மேகமாக மாறி மின்னலாய் மின்னி இடியாக ஒலித்து மழையாக பொழிவாய் எனப் பாடுகிறார். மழை பொழிவது நாட்டிற்கு செழிப்பு நீ பெய்தால் செழுமை பொங்கும் எங்கும் மகிழ்ச்சி தங்கும். அந்த மகிழ்ச்சியில் எங்கள் பெருமானை நினைத்து, துதித்து மார்கழி நீராடி நாங்களும் மகிழ்வோம் என்கிறார். 


எப்படி அன்றே மழை பொழிவதை இவ்வளவு துல்லியமாக ஆண்டாள் கணித்தார் என்று பலர் வியக்கிறார்கள்! ஆனால் என்னிடம் யாராவது இந்தக் கேள்வியை கேட்டால் சொல்வேன் “பத்மநாபன் மேல் தீராத மையல் கொண்ட இந்த மயிலுக்கு மழை வருவது தெரியாதா என்ன!


மார்கழி 4 ஆம் நாள் பாடல்..


ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

Comments

Popular posts from this blog

29. சிற்றம் சிறுகாலே..

27. கூடாரை வெல்லும்..

30. வங்கக் கடல்..