3. ஓங்கி உலகளந்த...
3. ஓங்கி உலகளந்த...
#மார்கழியின்_மறை
இன்றைய உலகில் வாழும் மக்களுக்கு என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும்? இலவச வைஃபை, ஆப்பிள் ஐ போன், விதவிதமான ஆடைகள், நிறைய நகைகள், நல்ல கார், கை நிறைய பணம் போன்ற ஆடம்பரத் தேவைகளை மறந்து யோசித்தால் அடிப்படையான அத்யாவசியமான எரிர்பார்ப்புகள் என்றால்..
நல்ல சாலைகள் வேண்டும், சுகாதாரமான சுற்றுப்புறம் வேண்டும், நல்ல குடிநீர் வேண்டும், நல்ல கல்வியும், தரமான மருத்துவமும் நியாயமான கட்டணத்தில் வேண்டும், நல்ல உணவு வேண்டும், அதாவது மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு நல்ல ஆட்சி வேண்டும் இதெல்லாம் நமக்கு கிடைக்கும் என நம்பி தான் வாக்களிக்கிறோம்.
ஆனால் அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் என்ற பேரில் வாயில் வடை சுட ஆரம்பித்து இன்று பிரியாணியே கிண்டுகிறார்கள்! யாரிடம் போய் இதெல்லாம் கேட்பது? ஆண்டாள் காலத்திலும் இப்படி கேட்க அவர் ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்..
மாதம் மும்மாரி மழை பெய்ய வேண்டும்.. நாட்டில் தீயவை அழிய வேண்டும்.. விவசாயம் செழித்து நெற்பயிர்கள் விளைய வேண்டும் அவ்வயல்கள் ஊடே ஓடும்..கால்வாயில் மீன்கள் துள்ளிக் குதித்து விளையாட வேண்டும்.. கரையோரச் செடிகளில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களில் தேன் உண்ண வேண்டும்..
பால் வளமிக்க பசுக்கள் நாம் கறப்பதற்கு முன்பே வள்ளல்கள் போல தானாகவே பாலை சுரந்து பொழிய வேண்டும்.. எங்கும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்க வேண்டும்! எந்த அரசியல்வாதியிடம் கேட்பது.? ஆனால் அரசியல்வாதிகள் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள் என அன்றே ஆண்டாளுக்கு தெரிந்திருக்கிறது.!
இத்தனையும் வேண்டுமா வாருங்கள்.. தன் பாதத்தால் ஓங்கி இவ்வுலகை அளந்த பெருமாளை வணங்கி குளித்து விரதம் இருப்போம்.!அப்படி இருந்து அவனை மகிழ்வித்தாலே போதும் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.. அவன் உலகம் சுற்றும் அரசியல்வாதி அல்ல.. உலகை தன் அடியால் அளந்தவன்..
அவன் அடி தொழுதால் போதும் நம்செல்வம் செழிக்கும்.. இத்தனயும் இந்த மார்கழி விரதத்தின் மகிமைகள் என்கிறார் ஆண்டாள்.
மார்கழி 3 ஆம் நாள் பாடல்..
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து
ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்
பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.

Comments
Post a Comment