28. கறவைகள் பின் சென்று..

 28. கறவைகள் பின் சென்று..


#மார்கழியின்_மறை


இதிகாசங்களில் புகழப்பட்ட முதல் வளர்ப்பு மகன் கண்ணன் தான் அவன் திடீரென ஒருவரால் அவனது 30 வயதில் வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்டவன் இல்லை. மதுராபுரியில் பிறந்த சில மணி நேரங்களிலேயே பிருந்தாவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வளர்ந்தவன். பால் மணம் மாறாத சிசுவாக தன் சொந்தத் தாயின் தாய்ப்பாலைக்கூட அருந்தும் பாக்கியம் பெறாதவன்! 


அதனால் தான் என்னவோ கோகுல பிருந்தாவனத்தில் அவன் பாலையும் வெண்ணையையும் திருடி திருடித் தின்றிருக்கலாம். யது குலத்தில் பிறந்த கண்ணனை ஆயர்குல மன்னனாக.. தங்கள் அன்பு ரமணனாகவே அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். “மன்னிப்பு” ஏய்.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.. ரமணா படத்தில் கேப்டனின் புகழ் பெற்ற பஞ்ச் டயலாக் இது. 


கோலிவுட் ரமணாவுக்கு வேண்டுமானால் இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கோகுலத்து ரமணனுக்கு அது மிகப் பிடிக்கும் என்கிறார் ஆண்டாள். சரி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? தவறு செய்ததால்! ஆமாம் ஏன் தவறு செய்ய வேண்டும்? அது தெரிந்து செய்த தவறல்ல தெரியாமல் நடந்த தவறுகள்!  ஆக்சுவலி எங்க ஆயர்குலத்தோட குவாலிட்டி தெரியுமா.?


காலையில மாடு கன்னு மேய்க்க ராமராஜன் மாதிரி பாடிக் கிட்டே கிளம்புவோம் பசிச்சா இருக்கிறதை பகிர்ந்து கிட்டு லஞ்ச் சாப்பிடுவோம். நாங்க அவ்வளவா கல்வியறிவு அதிகமில்லாத படிக்காத இடையர் குலத்து ஆளுங்க.. ஆனா நீ.. எங்க குலத்துல குறையில்லாம வந்து பிறந்த கோவிந்தன்!  பெரிய அறிவாளி. நீ எங்க குலத்துல நீ பிறந்ததே எங்களுக்கு பெரும் புண்ணியம்.


உனக்கும் எங்களுக்கும்  இருக்குற உறவை யாராலும் பிரிக்கவே முடியாது. இதையும் மீறி எப்பவாவது சின்னப் புள்ளத்தனமா நாங்க எதாவது தெரியாம பேசியிருந்தாலோ.. இல்ல உன்னை தப்பா பேர் சொல்லிக் கூப்பிட்டு இருந்தாலோ அதுக்கெல்லாம் கோவப்படாம நாங்க செஞ்சத எல்லாம் மன்னிச்சு நாங்க கேட்டதை கொடுத்துடு அப்படி கொடுத்துட்டா அதுவே போதும்.


உன்னையே நினைச்சு பாடிகிட்டு இருக்கிறதவிட நாங்க வேற என்னத்த புதுசா செஞ்சிடப் போறோம். ஆண்டாள் கண்ணனிடம் தான் அறியாமல் செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கிறார். அவன் மன்னிப்பான் என்று மிகவும் ஆணித்தரமாக நம்புகிறார். மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்ன்னு சொல்லுவாங்க. அதனால் சிறிதும் தயங்காமல்..


தான் மனித பிறப்பு என்பதை மன்னிப்புக் கேட்டு நிரூபிக்கிறார் ஆண்டாள். நிச்சயம் அவன் மன்னிப்பான்னு அவருக்கு நன்றாகத் தெரியும். ஏன்னா ரமணன் பெரிய மனுஷன் அல்லவா. 


மார்கழி 28 ஆம் நாள் பாடல்...


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்

அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்

குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு

உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத

பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை

சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே

இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய். 

Comments

Popular posts from this blog

29. சிற்றம் சிறுகாலே..

27. கூடாரை வெல்லும்..

30. வங்கக் கடல்..