23. மாரி மலை முழஞ்சில்…
23. மாரி மலைமுழஞ்சில்..
#மார்கழியின்_மறை
இன்றைக்கு ஒருவரை சிங்கம் போல இருக்கிறார் என்ற உவமையை அதற்கு துளியும் பொருத்தமில்லாத ஆட்களுக்கு பயன்படுத்துவதை பரவலாகப் பார்க்கிறோம்! ஏரியா கவுன்சிலரின் ஒன்று விட்ட சித்தப்பா மகனுக்கு கூட சிலிர்த்தெழுந்த சிங்கமேன்னு பிளக்ஸ் அடிக்கும் அல்லக்கைகள் இருக்கிறார்கள்! ஆண்டாள் கண்ணனை சிங்கம் என்று அழைப்பது அதுபோல அல்ல!
அவர் நரசிம்மமாக அவதாரம் எடுத்தவன் என்பதால்! அந்த சிங்கம் போன்ற வீரத்தால் எதிரிகளை அழித்தவன் மக்களை காத்தவன்! அடைமழைக் காலத்தில் தன் மலைக்குகையில் உறங்கி ஓய்வெடுத்த சிங்கம் அக்காலம் முடிந்ததும் துயிலெழுந்து கண்ணில் தீ பறக்க வீரமாய் அதன் பிடரியை சிலிர்த்து உடம்பை உதறி நெட்டி முறித்து நான்கு பக்கமும் பார்த்து பின்னர் கம்பீரமாக கர்ஜனை செய்து..
தன் குகையை விட்டு வெளியேறுவது போல காயாம்பூ நிறக் கண்ணா நீயும் எழுவாயாக! உன் பரந்த மாளிகையிலிருந்து வெளியேறி உனக்கான சிங்காசனத்தில் அமர்ந்து அடியவர் நாங்கள் உன்னிடம் கேட்ட கோரிக்கைகளை சீர் தூக்கிப் பார்த்து எங்களுக்கு அதை அருள வேண்டும் என்கிறார். இதில் வியப்பான விஷயம் அந்த காலத்திலேயே ஆண்டாளுக்கு சிங்கங்கள் பற்றித் தெரிந்திருந்தது!
இந்தியாவின் புவியியல் அமைப்புப்படி குஜராத் மாநிலக் காடுகள் தான் சிங்கங்கள் வாழ்வதற்கான சூழல் அமையப் பெற்றவை தமிழகத்திலோ ஶ்ரீவில்லிப்புத்தூரிலோ சிங்கங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை இருப்பினும் மலைக் குகையில் இருந்து வெளிப்பட்ட சிங்கம் என்பதை அவர் காலத்தில் யாத்ரீகர்கள் யாரோ சொல்லக் கேட்டு எழுதி இருக்கலாம். இருப்பினும்..
சிங்கத்தின் பார்வை அதன் சுபாவம் இதெல்லாம் கேட்டு உள்வாங்கி தன் சொந்தக் கற்பனையில் இப்படி எழுதியதும் மிகுந்த ஆச்சர்யம் தான்! சிங்கத்தின் பிடரி மயிர்க்கு வேரி மயிர் எனப்பெயர். அது வேர்க்கும் போது ஏற்படும் அரிப்பில் தான் அது தலையை சிலிர்க்கும் சிங்கக் கூட்டத்து தலைவனை அதன் பிடரி மயிர் மணத்தை கொண்டு தான் பிற சிங்கங்கள் தெரிந்து கொள்ளுமாம்.
இந்த உண்மைகள் எல்லாம் தாண்டி ஆண்டாள் கண்ணனை சிங்கம் எனப்பாட நரசிம்ம அவதாரமே இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும். ஏன்னா அந்தச் சிங்கம் கோபத்தில் ஓங்கி அடிச்சா எத்தனை டன் வெயிட்டோ! அதை இந்த உலகம் தாங்குமா?
மார்கழி 23 ஆம் நாள் பாடல்...
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
Comments
Post a Comment