2. வையத்து வாழ்வீர்காள்..

 2. வையத்து வாழ்வீர்காள்..

#மார்கழியின்_மறை

ஒருவர் தீவிர அசைவ உணவு விரும்பியாக இருப்பார், ஆனால் விரதம் இருந்து மாலை போட்டால் அந்த விரதம் முடியும் வரை அசைவத்தை கையால் கூட தொடமாட்டார். உணவில் மட்டுமல்ல பல கெட்டப் பழக்கங்களை விரத காலத்தில் கைவிடுவதே மெய்யான பக்தி. தீய பழக்கங்களை கை விடலாம், நல்ல பழக்கங்களை கைவிடுவார்களா?


நம் ஆண்டாள் விடச் சொல்கிறாரே! அதுவும் பெண்களால் கைவிடவே முடியாத ஒரு பழக்கத்தை!  அது என்ன பழக்கம் என்று கேட்டால், எந்தப் பெண்ணும் தன்னை அலங்கரித்துக் கொள்ளவேகூடாது என்கிறார்! இதெல்லாம் நடக்கிற காரியமா? நீ அலங்கரித்துக் கொள்ளாதே என்றால் எந்தப் பெண்ணாவது கேட்பாளா?


பெண்கள் கொடிய கொரோனா காலத்தில் கூட இவ்வுலகை விட்டு எப்போது கொரோனா நோய் பறக்கும் என்று கவலைப்பட்டதை விட எப்போது பியூட்டி பார்லர் திறக்கும் என்று தான் கவலைப்பட்டனர். தங்களை அழகாக அலங்கரித்துக் கொள்வது பெண்களின் இயற்கை குணம். அந்த இயல்பான குணத்தை ஏன் விட்டுவிட வேண்டும்?


பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமனை எண்ணி பாவை நோன்பிருக்கும் எனதருமைப் பெண்களே வாருங்கள் நமது விழிகளில் மையிட வேண்டாம், நம் தலைகளில் பூச்சூட வேண்டாம் என ஆண்டாள் அழைக்கிறார். நல்லவேளை அன்று ஆண்டாளுக்கு எந்த அல்லக்கைகளும் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால்?


“தாய்மார்களே எங்கள் அம்மா ஆண்டாள் அழைக்கிறார்” என பேனரும் கட்அவுட்டும் வைத்திருப்பார்கள். இல்லை மண்சோறு சாப்பிட்டு, அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து அங்கபிரதட்சணம் செய்து கதறி அழுது கண்ணீர் விட்டு நாடகம் நடத்தியிருப்பார்கள். ஆனால் நம் நாச்சியார், ‘நாங்கள் நெய் உண்ணோம்.. பால் உண்ணோம்.. 


தீய சொற்கள் பேசாதிருப்போம், தான தருமங்கள் செய்வோம்,  செய்யக் கூடாத செயல்களை செய்யாமல் இருப்போம், இதெல்லாம் பொதுவாக விரதம் இருக்கும் அனைவரும் செய்வார்களே என நீங்கள் நினைக்கும் போது சொல்கிறார்,


 ‘பெண்களின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பதே..இந்நோன்பின் நோக்கம் என்று’ 


பரந்தாமன் அருளில் உய்வடைய நோன்பிருக்கும் எல்லா பெண்களும் எந்த ஒப்பனையும் இன்றியே மனதால், குணத்தால், கண்ணன் மேல் கொண்ட பக்தியால் பேரழகிகள் என்பதையும் இப்பாசுரத்தில் நமக்குப் புரிய வைக்கிறார் ஆண்டாள்.!


மார்கழி 2ஆம் நாள் பாடல் :


வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடிநெய்யுண்ணோம் 

பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு 

எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யா 

தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி


உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

Comments

Popular posts from this blog

29. சிற்றம் சிறுகாலே..

27. கூடாரை வெல்லும்..

30. வங்கக் கடல்..