18. உந்துமத களிற்றன்…

 18. உந்து மதகளிற்றன்..

#மார்கழியின்_மறை

மாதவிப் பந்தல் என்றால் என்னவென்று தெரியுமா? மல்லிகைக் கொடிகள் அடர்ந்து படர்ந்து பந்தல் போல இருப்பதே! அதாவது இன்றைய அரசியல்வாதிகளுக்கு வைக்கும் மலர் அலங்கார வளைவு போன்றது. ஒரு முழம் மல்லிகையே மணம் வீசி நம்மை கிறங்க வைக்கும். ஒரு பந்தல் முழுவதும் மல்லிகைக் கொடி! அப்பந்தலில் மறைந்து வசிக்கும் குயில்கள் பல முறை கூவிவிட்டன! 


அடிப் பெண்ணே! நறுமணம் வீசும் கூந்தல் உள்ளவளே! உன் வளையோசை கல கலகலவென ஒலிக்க தாமரை மொட்டை கையில் ஏந்தியது போன்ற உனது அழகிய விரல்களால் தாழ்நீக்கி இந்தக் கதவை திறந்துவிடு என்றழைக்கிறார். யாரை? கடந்த 17 ஆண்டாள் பாசுரங்களில் வராது திடீரென இந்த 18 ஆம் பாசுரத்தில் வந்து அறிமுகமாகிறார் நப்பின்னை என்னும் பெண்! 


டிவி சீரியல்களில் இந்த வாரம் முதல் இவர் தான் இனிமேல் இந்த கேரக்டர் என அறிவிப்பது போல இவர் தான் கண்ணனின் முறைப் பெண் எனவும் இவளையும் அவர் மணந்து கொண்டார் என்பாரும் உண்டு! திருப்பாவையின் 18 ஆம் பாசுரத்தில் கெளரவ தோற்றத்தில் அறிமுகம் ஆகும் இந்த நப்பின்னை பாத்திரம் தொடர்ந்து அடுத்தடுத்து சில பாசுரங்களில் தலை காட்டுகிறார். 


தமிழ் சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை போல அரங்கனின் முறைப்பெண் என நப்பின்னையை ஆண்டாள் சித்தரிக்கிறார். ஆண்டாள் அரங்கனை அளவிலாது நேசித்தாலும் நப்பின்னை  மீது பொறாமைக் கொள்ளாமல் இவள் அழகையும் மேற்கூறியபடி வர்ணிக்கிறார். உன்மத்தம் பிடித்த யானையையும் ஊதித்தள்ளுபவன், சண்டைன்னு வந்துட்டா பின் வாங்காது மோதும் சண்டியர்..


வலிமை பாய்ந்த வீரமான தோள்கள் உடைய நந்தகோபன் மருமகளே ஆயர்பாடியின் குலமகளே கோழியினங்கள் கூவி பொழுது விடிந்து விட்டது! வா வந்து கதவைத் திற! உன்னுடைய கணவன் எம் உள்ளம் கவர்ந்த கண்ணன் புகழைப் போற்றிப் பாடிட இந்த அதிகாலையில் வந்துள்ளோம்! இன்னொரு பெண்ணை பந்தார்விரலி என்றும், மணம் கமழும் கூந்தல் உள்ளவள் என்றும், செந்தாமரைக் கைகள் என்றும்..


அந்தக் கை நிறைய அழகிய வளையணிந்தவள் என்றும் மனதில் வஞ்சனை இல்லாமல் புகழ்கிறார் ஆண்டாள்! அவர் இப்படி வஞ்சனை இன்றிப் பாடினால் அது கேட்டு திறக்காத கதவுகள் தாம் ஏது!!


இந்த 18ஆம் நாள் பாடலின் பெரும் சிறப்பு இது இராமானுஜருக்கு மிகப் பிடித்த பாசுரம்! இராமானுஜரே தீவிர திருப்பாவை விசிறி எவரும் அவரை இராமானுஜர் என்றழைப்பதை விட திருப்பாவை ஜீயர் என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். 


இன்றும்  இந்தப் பாடலை மட்டும் கோவில்களில் இரு முறை பாடுவது வழக்கம்.! அதனால் என்ன ஆண்டாளின் தேனமுதத் தமிழை இரு முறையல்ல எத்தனை கோடி முறைக் கேட்டாலும் நமக்கெல்லாம் திகட்டவே திகட்டாது.!


மார்கழி 18 ஆம் நாள் பாடல்...


உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்

செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Comments

Popular posts from this blog

29. சிற்றம் சிறுகாலே..

27. கூடாரை வெல்லும்..

30. வங்கக் கடல்..