17. அம்பரமே தண்ணீரே…

 17.அம்பரமே தண்ணீரே...

#மார்கழியின்_மறை

குடும்பங்களில் ஊடலிலுள்ள கணவன் மனைவி இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் பேசுவது போல “உங்கம்மா என்ன சொல்றா? கேளு” எனக் கணவன் கேட்பதும் “என் முடிவு அதுதான்னு உங்கப்பா கிட்ட சொல்லு” என மனைவி பதிலுரைப்பதும் சாதாரணம். ஆம்! நமக்கு மிகப் பிடித்தவர்களைப் பற்றி பேச வெட்கப்படும் வேளையிலும் இதே போல கொஞ்சம் ஜாடையாகப் பேசுவது வழக்கம். 


இங்கும் ஆண்டாள் அவர் உள்ளம் கவர்ந்த கண்ணனை எழுப்ப வேண்டும்! ஆனால் உடனே கண்ணனை நீ எழுந்திரு என்று எழுப்பி விடாமல் மெல்ல ஒவ்வொருவராக எழுப்பி கடைசியில் கண்ணனை எழுப்பிவிடச் சொல்கிறார்! முதலில் நந்தகோபா நீ எழுந்திரு, தாயே யசோதா நீயும் எழுந்திரு, அப்பா பலராமா அப்படியே நீயும் எழுந்து உன் தம்பி கண்ணனையும் எழுப்பு என்கிறார் ஜாடை மாடையாக! 


மனமுருகக் கடவுளிடம் அவர் வேண்டும் போதும் உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர் இம்மூன்றையும் தாவென உலகில் முதன் முதலில் கேட்டது ஆண்டாளாகத் தான் இருக்க வேண்டும்! இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என இன்று மதங்களை கடந்து நிற்கும் மந்திரச் சொற்களுக்குச் சொந்தக்காரி நம் நாச்சியார் தான்! 


உனது அருள் தவிர நான் உயிர் வாழ இந்த அத்யாவசியங்கள் மட்டுமே எனக்குப் போதும் என்கிறார்! ஆனால் பாருங்கள் இதையெல்லாம் கேட்ட ஆண்டாள் தான் இருக்க ஒரு இடம் மட்டும் கேட்கவில்லை? ஏன்? ஆண்டாள் கைலாசா போல ஏதும் சொந்தத் தீவு ஒன்றை வாங்கியிருந்தாரா? இல்லை அவரிடம் அதெல்லாம் ஏதுமில்லை!


உலகில் தனக்கு சொந்தமாகச் சில அடிகள் நிலம் கிடைப்பதை விட இந்த உலகையே ஓங்கி தன் திருவடிகளால் அளந்தவன், அந்த நாராயண மூர்த்தியின் காலுக்கு கீழ் ஒரிடம் கிடைத்தால் அதுவே அவருக்கு போதும். இதை விட வேறென்ன வேண்டும் எனும் போது மூர்த்தியின் கீர்த்தியை பாடவே பிறந்த ஆண்டாளின் பேராசை இல்லாத அந்த மனதின் மீதும், அவரது பாசுரத்தின் மீதும் நம்மை பேராசை கொள்ள வைக்கிறார்.! 


மார்கழி 17 ஆம் நாள் பாடல்...


அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த

உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

Comments

Popular posts from this blog

29. சிற்றம் சிறுகாலே..

27. கூடாரை வெல்லும்..

30. வங்கக் கடல்..