16. நாயகனாய் நின்ற…
16.நாயகனாய் நின்ற..
#மார்கழியின்_மறை
அன்றைய அரசர்கள் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதற்கு அத்தாட்சியாக ஒரு முத்திரை மோதிரமோ பதக்கமோ தருவார்கள். அதைக் கொண்டு போய் உரியவரிடம் காட்டினால் நமக்குத் திறக்காத கதவுகளும் திறக்கும். நமக்கு வேண்டியதும் கிடைக்கும் என படித்து இருப்போம். ஆண்டாள் இப்பாசுரத்தில் நந்தகோபன் மாளிகையின் வாயிற் காப்போனிடம் அத்தாட்சியாக எதைச் சொல்கிறார் தெரியுமா?
“மாயக்கண்ணன் நேற்றே எங்களிடம் வந்து பெண்களே என்னிடம் நீங்கள் வேண்டியதை பரிசாக அளிப்பேன் என்ற வார்த்தையை நம்பி இங்கு வந்துள்ளோம்! அந்தக் குறும்பன் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவான். எங்களை வரச்சொல்லிவிட்டு நல்ல உறக்கத்தையும் தருவதில் மன்னன் அந்த மணிவண்ணன்! ஒரு வேளை நாங்கள் எங்கள் தோழியரை எழுப்பாமல் விட்டுவிடலாமா?
அது குற்றமாகிவிடுமே! அவர்களை எழுப்பத்தான் நாங்கள் நோன்பு இருந்து அதிகாலை நீராடி தூய்மையாக இத்தோரண வாயிலுக்கு வந்துள்ளோம்! தோரணையோடு இந்த வாயிலைக் காப்போனே! உனது தோரணையை விட்டுவிட்டு எங்களை உள்ளே விடு! நாங்கள் வந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு! அழகிய இம் மணிக்கதவின் தாழை விலக்கித் திறந்துவிடு!
இங்கே ஆண்டாள் பாகுபலி ராஜமாதா போல எம்மை வரச்சொன்னது அந்த மாயவனின் கட்டளை! அவரது கட்டளையே எங்களுக்கு சாசனமென கண்ணன் அளித்த வாக்கையே அக் காவலனிடம் அத்தாட்சியாக கூறுகிறார்! இக்காலத்தில் இளம் பெண்கள் கூட்டமாகப் போய் இப்படியெல்லாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை! வாயிலில் நிற்கும் எந்த வாட்ச்மேன் தடுப்பான்?
தன் வாயில் ஜொள்ளு விட்டு பெண்களுக்கு கதவுகளைத் திறந்து இருப்பான். ஆண்டாளின் பாடல்களில் தமிழில் அருகி மறைந்த பல தமிழ் வார்த்தைகளைக் காணலாம். உதாரணமாக கொண்மூ, எழினி போன்ற தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? இரண்டுமே மேகத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்! இன்று இந்தச் சொற்கள் மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லை!
இப்பாடலில் நென்னல் என்ற வார்த்தை வருகிறது! நென்னல் என்றால் நேற்று என அர்த்தம் (மாணிக்கவாசகரின் திருவெம்பாவையிலும் இந்த வார்த்தை வருகிறது) ஆம்! ஆண்டாள் அன்று இன்னலின்றி எழுதிய தமிழ்.. நென்னலில் மட்டுமன்று.. என்றென்றும் கன்னல்.
மார்கழி 16 ஆம் நாள் பாடல்...
நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
Comments
Post a Comment