15. எல்லே இளம்கிளியே…
15.எல்லே இளம்கிளியே
#மார்கழியின்_மறை
கடந்த 14 பாடல்களில் தோழியரை பாடல்களால் எழுப்பிய ஆண்டாள் இந்த 15 வது பாடலிலிருந்து அவர்களோடு பேசுகிறார்.. ஒருவரின் குணநலன்கள் பற்றி அறிந்து நெடுநாள் பழகிய இருவர் பேசும் போது பேச்சில் நக்கலும் நையாண்டியும் தொனிக்கும் அல்லவா.
"நீ யாருன்னு எனக்குத் தெரியும் நான் யாருன்னு உனக்குத்தெரியும் இந்த டகால்டி வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம் மகனே"என்று கவுண்டமணி சொல்வது போல. பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருப்பதை நாம் கவனிப்பதில்லை நிறைய சானல்களில் ரிமோட்டை தேட வைப்பது சுவாரஸ்மில்லாத பேச்சுகள் தான்.
ஆண்டாளின் இந்த பாசுரத்தின் விளக்கத்தை மட்டும் வட்டார வழக்கான மதுரைத் தமிழில் இருவர் பேசிக் கொள்வதைப் போல பார்க்கலாமா.! எளியவர்களின் மொழியில் படிக்கஒரு சுவாரஸ்யம் கிடைக்கும் என்பதற்காக...
எழுப்புபவர்கள் : இந்தா புள்ள கிளி மாதிரி இருக்குற பொண்ணே! எம்பூட்டு நேரந்தான் தூங்கி கிட்டு கிடப்பே..
படுத்து இருக்கும் பெண் : ஏ.. இங்காரு.. என்ன எல்லாரும் கீச் கீச்னு சலம்புறிங்க கொஞ்சம் பேசாம இருங்க இந்தா வாரேன்..
எழுப்புபவர்கள் : ஏய்ய்ய் நீ நெசமாவே பெரிய ஆளு தான்.. நீ இப்படித்தான் பேசிக்கிருப்பேன்னு எங்க எல்லாருக்கும் முந்தியே தெரியும்.. உன் வாயில இர்ந்து இதான் வருமுன்னும் தெரியும்..
படுத்து இருக்கும் பெண் : யாரு நானா ஆஹ்கா.. நீங்க எல்லாம் தான் பெரிய ஆளுங்க..! எனக்கு பாடஞ் சொல்லித்தந்த வாத்தியாரே நீங்க தான்ப்பு..எல்லாத்தையும் நான் உங்ககிட்ட தானே கத்துகிட்டேன்.!
எழுப்புபவர்கள் : பார்றா! எழுந்து வராம படுத்துக்கிட்டே சும்மா ரூட்டக் கொடுத்துகிட்டு இருக்கே! வெரசா எழுந்து வா.. விரதம் இருக்குறத விட அப்படி உனக்கு என்னா பெரிய சோலி கிடக்கு?
படுத்து இருக்கும் பெண் : எல்லாருமா வந்துருக்கிங்க?
எழுப்புபவர்கள் : பார்றா அப்புராணி மாதிரி கேக்குறதை எல்லாருமே வந்துட்டோம் வேணும்ன்னா நீயே வந்து சரியான்னு எண்ணி பாத்துக்கோ..
மதுராபுரியில பெரிய ஆனையவே பூனையாட்டம் தூக்கிப்போட்டு மிதிச்சே கொன்னவரு.. எதிரிய ஒத்தைக்கு ஒத்த நேரா நின்னு அவன் நெஞ்சுல டரியலை கொடுக்குற சண்டியரு.. அவன் பகுமானத்தை உண்டு இல்லைன்னு ஆக்குன மாயன் அவரு அவரைப் பத்தியே பாடிகிட்டே இருக்கத்தான் உன்ன உசுப்புறோம், எழுந்து வா கண்ணு
மதுரைத் தமிழ் பேசுபவர்கள் ஆண்டாளைப் படித்தால் இப்படித்தான் பேசுவார்களா எனக் கேட்டால் இல்லை அவர்கள் இன்னும் நல்ல தமிழுக்கு மாறி விடுவார்கள் என்பேன். ஏனெனில் பக்தியில் தமிழ் வளர்க்க பாசுரங்களில் ஆண்டாள் எழுதிய பாடல்கள் அப்படி.!
மார்கழி 15ஆம் நாள் பாடல்...
எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
Comments
Post a Comment