13. புள்ளின்வாய் கீண்டானை…
13. புள்ளின்வாய் கீண்டானை...
#மார்கழியின்_மறை
திருப்பாவையை எல்லாரும் விரும்பக் காரணம் இதில் தான் இராமாயணம் மகாபாரதம் இரண்டையும் ஒன்றாகப் படிக்கலாம். இப்பாசுரத்தின் முதல் வரியில் கிருஷ்ண அவதாரத்தில் கொக்கின் வடிவில் வந்த பகாசூரனின் அலகைப் பிளந்ததையும் அடுத்த வரியில் ராம அவதாரத்தில் இராவணனின் பத்துத் தலைகளைக் கிள்ளி எறிந்ததையும் பாடுகின்றார் ஆண்டாள்.
அவதாரங்கள் வேறாகினும் அவர் வீரம் எப்போதும் மாறாது! அத்தகைய வீரம் மிகுந்தவரின் புகழ் பாட எல்லாப் பெண்களும் முன்பே சென்றுவிட்டனர். பார் வானில் வெள்ளி முளைத்து வியாழன் உறங்கிவிட்டது. நீயும் அந்த வியாழன் போல உறங்குகிறாயா அல்லது கள்ளத்தனமாக உறங்குவது போல நடிக்கிறாயா?
பார்! இந்த அதிகாலையில் பறவைகள் கூட எழுந்து சப்தமிடுகின்றன தாமரை மீது வண்டமர்ந்தது போல கண்ணுள்ள பெண்ணே நீ இன்னுமா உறங்குகிறாய்? உன் உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எங்களோடு சேர்ந்து குளிரக் குளிர நீராடு என்றழைக்கிறார்.
இப்பாசுரத்தில் வியத்தகு விஞ்ஞானம் உள்ளது. பூமி மட்டுமின்றி பிற கோள்களின் உதய அஸ்தமன நேரங்களையும் இன்றைய அறிவியல் முன்னேற்றத்தால் கண்டுபிடித்து இருக்கிறோம். ஆனால் 1200 ஆண்டுகளுக்கு முன்பான ஆண்டாள் காலத்தில் அவரின் வான சாஸ்திர அறிவைப் பார்த்து இன்றைய விஞ்ஞானம் வியந்து நிற்கிறது!
ஆண்டாள் “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்கிறார் அதாவது வியாழன் கோள் உறங்கும் வேளையாம்! பூமியின் அதிகாலையே வியாழனில் இரவு என இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டறிந்து சொன்னது பெரிதல்ல!
1200ஆண்டுகளுக்கு முன்பு பெரும் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் தென் தமிழகத்தில் உள்ள ஶ்ரீவில்லிப்புத்தூர் எனும் எளிய ஊரில் பெரியாழ்வார் என்னும் எளியவரின் வளர்ப்பு மகளாக வளர்ந்த ஆண்டாள் எனும் பெண் அரங்கன் பால் கொண்ட பக்தியால் தெய்வீகக் காதலால் இதை அன்றே சொன்னார் எனும் போது நமக்கு மெய் சிலிர்க்கிறது!
மார்கழி 13 ஆம் நாள் பாடல்...
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
Comments
Post a Comment