11. கற்றுக் கறவை…

 11. கற்றுக் கறவை...

#மார்கழியின்_மறை

சினிமாப் பாடல்களில் மின்னல் இடை, கொடியிடை, இஞ்சி இடுப்பழகி இப்படி எல்லாம் இடுப்பை பற்றி பாடல்கள் பல உண்டு! “இல்லையென்று சொல்வதுந்தன் இடை அல்லவா மின்னல் இடை அல்லவா” எனக் கவிஞர் கண்ணதாசனும்.. “இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடி போல் மெல்ல வளையும்.” என கவிஞர் வாலியும் எழுதியதற்கு இப்பாசுரமே தூண்டுகோல்.!


ஆண்டாள் இடைக்கு என்ன உவமை தருகிறார் தெரியுமா.! புற்றில் இருக்கும் பாம்பு எடுக்கும் படத்தைப் போன்ற இடை என்கிறார். பாம்பு படம் எடுக்கும் வரை அது தெரியாது எடுத்த பின்பு சரேலென விரியும்! அதாவது இருப்பதும் தெரியாது விரிவதும் தெரியும்.! புற்று அரவு அல்குல் என்கிறார் என்ன அழகான உவமை ஆனால் அல்குல் என்பது இடையல்ல அது பெண்ணின் பிறப்புறுப்பு எனும் வாதமும் உண்டு!


அது தான் நாகத்தின் விரித்த படம் போல இருக்கும் இன்றைய உரையாசிரியர்கள் நாகரிகம் கருதி அல்குலை இடையாக்கி விட்டார்கள் என்ற கருத்தும் இருக்கிறது! அப்படிப் பார்த்தால் தமிழில் யோனி பற்றி எழுதிய முதல் பெண்ணியவாதி ஆண்டாள் தான். எப்படியோ அவர் சொன்ன அந்த உவமை இரண்டிற்கும் மிக அழகாகப் பொருந்துகிறதே! 


கன்றுகளோடு கறவைப் பசுக்களும் கூட்டமாக நிற்க பாலைக் கறந்து கொண்டிருக்கும் ஆயர் குலத்தினர் பாலைக் கறப்பதிலும் தம்மை எதிர்க்கும் பகைவர் குல வேரை அறுப்பதிலும் வல்லவர்கள் அக்குலத்தில் பிறந்த தங்கக் கொடியே.. புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற அல்குல் உடைய மெல்லிடையாளே, மயில் போன்ற பெண்ணே உன் தோழியர் யாவரும் உன் வீட்டு வாசல் வந்து..


கார் முகில் வண்ணனின் புகழைப் பாடிக் கொண்டு இருக்கிறோம்.. எதற்கும் அசராமல் உனக்கு ஏனிந்த உறக்கம்? செல்வச் சீமான் பெற்ற செல்லப் பெண்ணே நீ அசையாமல் படுத்துறங்கும் நோக்கமென்ன? எழுந்திடுவாய்  என்றழைக்கிறார்.


அரவமின்றி (சப்தம்) உறங்கும் பெண்ணிற்கு அந்த அரவம் விரிக்கும் படத்தையே உவமையாகச் சொன்ன ஆண்டாளின் பாசுரம் பக்தி இலக்கியத்தின் மகுடி! இதற்கு மயங்காத பாம்புகள் ஏது.! 


மார்கழி 11ஆம் நாள் பாடல்..


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே

புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

Comments

Popular posts from this blog

29. சிற்றம் சிறுகாலே..

27. கூடாரை வெல்லும்..

30. வங்கக் கடல்..