10. நோற்றுச் சுவர்க்கம்...
10. நோற்றுச் சுவர்க்கம்...
#மார்கழியின்_மறை
நாற்றம் அடிக்குது என்று மூக்கைப் பொத்திக் கொள்கிறோம். ஆனால் நாற்றம் என்றால் நல்ல மணம் என்றே அர்த்தம். துளசியை அழகுத் தமிழில் துழாய் (திருத்துழாய்) என்கிறார். துளசி வாசம் வீசும் நம் தவசியின் பெருமையைப் பாடு அவனை விரதமிருந்து துதித்தாலே போதும் உன் சொர்க்க வாழ்விற்கு நான் கேரண்டி என்கிறார் ஆண்டாள்.
சொர்க்கம் புகவேண்டும் என விரதம் இருக்கிற பெண்ணே நீ கதவைத் தான் திறக்கவில்லை ஒரு குரல் கொடுத்தாவது பதில் பேசலாமே, நறுமண துளசியை மாலையாய் அணிந்திருக்கும் நாரணன் பெருமையை ஊர் போற்றத் துதித்தால் அவர் பேரின்பத்தை நமக்கு பரிசாகத் தருவார். அதை விட்டுவிட்டு சிற்றின்பமான இந்த உறக்கம் உனக்குத் தேவையா?
அரசியல்வாதிகள் சொன்ன வாக்கினைத் தவறுவது போல, அன்று யமனிடம் வாய் தவறி வரம் கேட்டு தூக்கத்தை வரமாக பெற்றுக் கொண்டானே கும்பகர்ணன் அவனிடமிருந்து நீ தூக்கத்தை பரிசாகப் பெற்றுக் கொண்டாயா? அல்லது உனக்கும் அவனுக்கும் தான் போட்டியா? இல்லை அவன் தான் உன்னிடம் தோற்று விட்டானா.?
எல்லையற்ற உன் சோம்பலை துறந்துவிடு, வா வந்து இவ்வாசல் கதவை திறந்துவிடு.. என உறங்கிக் கிடப்பவளை கும்பகர்ணனோடு ஒப்பிடுகிறார். எனக்கென்னவோ இப்படி இனிய தமிழில் ஆண்டாள் பாடினால் கும்பகர்ணனே உறக்கம் கலைந்து எழுந்து வந்து விடுவான் என்றே தோன்றுகிறது.
மார்கழி 10 ஆம் நாள் பாடல்..
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
Comments
Post a Comment